பாடல் எண் : 28 - 1
சிந்தை வண்ணத்த ராய்த்திறம் பாவணம்
முந்தி வண்ணத்த ராய்முழு நீறணி
சந்தி வண்ணத்த ராய்த்தழல் போல்வதோர்
அந்தி வண்ணமு மாவரை யாறரே.
1
பொ-ரை: ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர், அடியவர்களின் சிந்தை வண்ணமும்; மாறுபடாத வண்ணம் முன்னே தோன்றிய வண்ணமும், முழுநீறு அணிந்து அந்திவண்ணமாகிய செவ்வண்ணமும், தழல்போல்வதோர் வண்ணமும் உடைய இயல்பினர்.
கு-ரை: சிந்தை - மனத்தின்கண். வண்ணத்தராய் - நிலை பெற்ற தன்மையை உடையவராய். திறம்பாவணம் - மாறுபடாதபடி, முந்தி - முற்பட்டு. முழுநீறணி சந்திவண்ணத்தராய் - முழுநீறு பூசிய செந்நிறத்தை உடையவராய். சந்தி - காலை மாலை வேளை செவ்வானம். அந்திவண்ணமுமாவர் - மாலைக் காலத்து செவ்வானம் போன்ற நிறத்தை உடையவருமாவர். சந்திவண்ணத்தர் - நன்றாகத் தியானிப்பவரது தியான உருவே தன் உருவமாக உடையவர். சந்தியா சத்திகளின் நிறங்களை உடையவராய் எனலுமாம்.