பாடல் எண் : 28 - 3
சிந்தை வண்ணமுந் தீயதோர் வண்ணமும்
அந்திப் போதழ காகிய வண்ணமும்
பந்திக் காலனைப் பாய்ந்த தொர் வண்ணமும்
அந்தி வண்ணமு மாவரை யாறரே.
3
பொ-ரை: ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் சிந்தை வண்ணமும், தீயின் வண்ணமும், அழகாகிய அந்திப்போதின் வண்ணமும், தானும், கடாவும், பாசக்கயிறுமாக வரிசையாகவரும் காலனைப் பாய்ந்து உதைத்த இயல்பும் உடையவர்.
கு-ரை: சிந்தை வண்ணம் - நினைப்பார் மனமே இடமாகக் கொள்ளும் தன்மை. தீயதோர் வண்ணம்- நெருப்பனைய சிவந்த நிறம். அல்லது தீயேந்தி நிற்கும் தன்மையும் கொடிய கோபமுடையராம் தன்மையும் என்க. அந்திப்போது - அந்திமாலை போன்ற. பந்தி - ஒழுங்கு. ஒழுங்குமுறையாகிய நீதியை நிலைநாட்டும் காலன் என்க. அந்தீவண்ணம் என்பது அந்தி எனக்குறுகியது. அந்தீ வண்ணம்- நெருப்பாம் தன்மை. அட்ட மூர்த்தங்களில் நெருப்பு வடிவாய் விளங்குபவன் என்க.