பாடல் எண் : 28 - 4
இருளின் வண்ணமு மேழிசை வண்ணமும்
சுருளின் வண்ணமுஞ் சோதியின் வண்ணமும்
மருளு நான்முகன் மாலொடு வண்ணமும்
அருளும் வண்ணமு மாவரை யாறரே.
4
பொ-ரை : ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர். இருளின் வண்ணமும், ஏழிசைகளின் வண்ணவேற்றுமைகளும், சுருண்ட சடையின் வண்ணமும், ஒளியின் வண்ணமும். நான்முகனும் திருமாலும் விண்பறந்தும் மண் புகுந்தும் காண்டற்கரிதென மருளும் வண்ணமும் அவர்கள் ஆணவம் அடங்கியவழி அருளும் வண்ணமும் உடையவராவர்.
கு-ரை: இருளின் வண்ணம் - அகோர முகத்தின் நிறம். ஊழிக் காலத்து இரவின்கண் அதன்மயமாய்ச் சுற்றித் திரியும் தன்மை எனலுமாம். அன்பரல்லாதார்க்கு இருளின் தன்மை போல உணர்தற்கரிதாய்த் தோன்றும் நிலை எனவும் கூறலுமொன்று, ஏழிசை வண்ணமுமாவர்-குரல் துத்தம் முதலிய ஏழிசையின் தன்மையனாய் விளங்குபவர். சுருளின் வண்ணமும் - எங்கும் சுற்றிச் சூழ்ந்திருக்கும் தன்மை. மருளும்-மயங்கும். நான்முகன் மாலொடு வண்ணம் - திருமால் பிரமராயிருக்கும் தன்மை எனலும் ஆம். அருளும் வண்ணம் - அருள் செய்யும் தன்மை. ஆவர் என்பதனை எல்லாவற்றோடும் கூட்டுக.