பாடல் எண் : 28 - 5
இழுக்கின் வண்ணங்க ளாகிய வெவ்வழல்
குழைக்கும் வண்ணங்க ளாகியுங் கூடியும்
மழைக்கண் மாமுகி லாகிய வண்ணமும்
அழைக்கும் வண்ணமு மாவரை யாறரே.
5
பொ-ரை : ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் நல்லியல்புகளினின்றும் இழுக்கி அல்லவை செய்தால் வெவ்விய அழலைப் போன்று வருத்தும் மறக்கருணைவண்ணமும், மழையைத் தன்னிடத்துடைய பெரிய மேகங்களின் இயல்பு போன்று வரையாது அருள் வழங்கும் வண்ணமும், தம்மடியார்களை அழைத்து அருள் வழங்கும் வண்ணமும் உடையவர்.
கு-ரை: இழுக்கின் வண்ணங்களாகிய வெவ்வழல் என்றிணைப்பின் ஆணவமலத்தின் பலவேறு உருவங்களாகிய கொடுமைகள் என்க. குழைக்கும் வண்ணங்கள்-மலபரிபாகம் செய்யும் குரு முதலிய முகூர்த்தங்கள், குழைந்து - கரைத்து வலியிலதாகச் செய்தல். மழைக்கண் மாமுகில் - மழையைத் தன்னிடத்துக் கொண்ட கரிய முகில். மழை - நீர். அழைக்கும் வண்ணம் -"அருந்தவர் வாவென்றணைத்த மலர்க்கையும்" (தி.10 திருமந்திரம்) அபயகரம் காட்டும் தன்மை.