பாடல் எண் : 28 - 6
இண்டை வண்ணமு மேழிசை வண்ணமும்
தொண்டர் வண்ணமுஞ்சோதியின் வண்ணமும்
கண்ட வண்ணங்க ளாய்க்கனல் மாமணி
அண்ட வண்ணமு மாவரை யாறரே.
6
பொ-ரை: ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் இண்டைமாலை சூடும் இயல்பும், ஏழிசை வடிவாகிய இயல்பும், தொண்டர்கள் நடுவில் நிற்கும் இயல்பும், ஒளி-இயல்பும், கண்ட வண்ணங்கள் அனைத்தும், கனல்போன்று செவ்வொளி விரிக்கும் மாணிக்கவண்ணமும், அண்டங்களின் வண்ணமும் ஆகியவர்.
கு-ரை : இண்டை வண்ணம் - தலைமாலையின் தன்மை. தொண்டர் வண்ணம் - அடியார் தன்மை. கண்ட வண்ணங்களாய் - இவையெல்லாம் பெருமான் கண்ட தன்மைகளாய். அனல்-நெருப்பெனச் சிவந்து விளங்கும். மாமணி- சிறந்த மாணிக்கம். அண்டம் - உலகம். ஆவர் என்பதை முன்னே தனித்தனிக் கூட்டுக.