பாடல் எண் : 28 - 9
செய்த வன்திரு நீறணி வண்ணமும்
எய்த நோக்கரி தாகிய வண்ணமும்
கைது காட்சி யரியதோர் வண்ணமும்
ஐது வண்ணமு மாவரை யாறரே.
9
பொ-ரை: ஐயாற்றில் எழுந்தருளும் இறைவன், ஒருகால் யோகு செய்தவனாகத் திருநீறணிந்த வண்ணத்தினன். காண்பதற்கு அரிய தன்மை வாய்ந்தவன், மனதிலே சிறைப்படுத்தித் தியானித்தற்கு அருமை வாய்ந்த தன்மையன். மென்மை தழுவிய அழகினன்.
கு-ரை: ஒருகால் யோகு செய்தவனாகத் திருநீறணிந்த வண்ணம் என்க. எய்த - அடைய. நோக்கரிதாகியவண்ணம் - காணுதற்கரிய தன்மை. கைதுகாட்சி - மனத்திற் சிறைப்படுத்திக் காணுதல். கைது - கைப்பற்றாக; அநுபவமாக. ஐது - மென்மை அல்லது அழகு.