பாடல் எண் : 29 - 1
நிறைக்க வாலிய ளல்லளிந் நேரிழை
மறைக்க வாலிய ளல்லளிம் மாதராள்
பிறைக்க வாலப் பெரும்புன லாவடு
துறைக்க வாலியோ டாடிய சுண்ணமே.
1
பொ-ரை: பிறையோடு கூடிய செஞ்சடையில் கங்கையாகிய பெரும்புனலை உடையவரும், திருவாவடுதுறையில் உள்ள கபாலியுமாகிய சிவபெருமானோடு ஆடிய திருநீற்றினை நிறைக்கத் தூய்மையுடையவள் அல்லள் இந்த நேரிழையணிந்த பெண்; அன்றியும் இப்பெண் அதனால் வரும் துயரங்களை மறைக்கும் வல்லமை உடையலளுமல்லள்.
கு-ரை: தலைவனைக் கண்டு மயங்கிய தன் மகளின் நிலையைத் தாய் கூறுவதாக அகப்பொருட் கருத்தமைந்த பதிகம் இது. நிறைக்க - உடலெங்கும் நிறைவிக்க. வாலியள் - தூயவள். இந்நேரிழை - இந்தத் தலைவி. மறைக்க - மறைத்துப் பேச.
வாலியள் அல்லள் - வலியள் அல்லள். பிறைக் கவாலம் - பிறையையும் கபாலத்தையும். பெரும்புனல் - காவிரி. கவாலி - கபாலமேந்தியவன். ஆடிய - உடனுறைந்து புணர்ந்த. சுண்ணம் - திருநீற்றுப்பூச்சு. திருநீற்றுப் பூச்சிற்கும் தான் செய்யும் களவொழுக்கத்திற்கும் போதிய தூய்மை உடையவள் அல்லள் என்றார். சுண்ணம் நிறைக்க எனக் கூட்டுக.