பாடல் எண் : 29 - 10
பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்
மிக்க வாளரக் கன்வலி வீட்டினான்
அக்க ணிந்தவ னாவடு தண்டுறை
நக்க னென்னுமிந் நாணிலி காண்மினே.
10
பொ-ரை: பெருமான் தன் நெஞ்சும் கற்பும் கவர்ந்து கொண்டனனேனும், அதுகுறித்துச் சிறிதும் நாணமில்லாதவளாகிய இப்பெண், மீண்டும், பூதங்கள் பக்கத்தில் நின்று பாடப் பலி கொள்வான் என்றும், ஆற்றல்மிக்க வாளை உடைய அரக்கனை வலி கெடுத்தான் என்றும், அக்கமாலைகள் அணிந்தான் என்றும், திரு ஆவடு தண்டுறையில் உள்ள திகம்பரன் என்றும் கூறிப்புகழ்ந்தவண்ணம் இருப்பாள்.
கு-ரை: பக்கம் - இருபுறங்களிலும். பலி - பிச்சை. மிக்க - செருக்கிய. அரக்கன் - இராவணன். வீட்டினான் - அழித்தான். அக்கு - என்புமாலை. நக்கன் - எல்லோரும் நகுதற்குரிய உடை நீத்த தோற்றமுடையவன். இந்நாணிலி - இந்த வெட்கத்தை விட்ட தலைவி. காமம்விடு அல்லது நாண்விடு என்பவற்றுள் நாணத்தை விட்டாள் என்க. நாணிலியாதலின் நக்கன் என்பாள் என்க.