பாடல் எண் : 29 - 7
பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத்
தஞ்ச மென்றிறு மாந்திவ ளாரையும்
அஞ்சு வாளல்ல ளாவடு தண்டுறை
மஞ்ச னோடிவ ளாடிய மையலே.
7
பொ-ரை: இப்பெண் திருவாவடுதண்துறையில் உள்ள, புலன் ஐந்தும் வென்ற பெருவீரனாகிய சிவபெருமானோடு ஆடிக் கொண்ட மயக்கத்தினால், பஞ்சனைய மெல்லடியுடைய உமா தேவியாரைப் பங்கிற்கொண்ட அப்பரமனைத் தஞ்சப்பொருளாகக் கொண்டு இறுமாப்பு எய்தி, வேறு யாரையும் அஞ்சாதவள் ஆயினள்.
கு-ரை: பஞ்சின் மெல்லடிப்பாவை - பஞ்சுபோல மெல்லிய அடிகளையுடைய பாவை; பார்வதி. தஞ்சம் - அடைக்கலம். இறுமாந்து - செருக்கியிருத்தலால். மஞ்சன், மைந்தன் என்பதன் போலி. மையல் - காம மயக்கம். ஆவடுதண்துறை மைந்தனோடு இவளாடியனையால், அவனையே அடைக்கலமாக எண்ணிச் செருக்கியாவையும் அஞ்சு வாளல்லள் என்க.