|
பொ-ரை: நாம் தொழுவது கடவுளும், பாற்கடலுள் எழுந்த நஞ்சு உண்டு தரித்த, அருட்டிருமேனியுடையவனும், ஒப்புமை சொல்லத் தக்கார் இல்லாத ஆற்றல் உள்ளவனும், அரத்துறைத் தலத்தை விரும்பிய ஒளியானவனும் ஆகிய பெருமானையே. கு-ரை: கடவுள் - ஆறு அத்துவாக்களையும் கடந்தவன். எழுநஞ்சு - இறந்தகால வினைத்தொகை. நஞ்சுண்ட உடலுளானை - ஆலகாலம் உண்டும் நஞ்சால் அழியாத உடலோடு கூடியவனை. ஒப்பாரி - ஒப்பு, `மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரியாங்கண்டதில்ழு (குறள் 1071). மற்றாரும் தன்னொப்பார் இல்லாதவன் என்றது. அடலுளான் - எம்முடைய வலியன். சுடர் உளான் - சிவாக்கினியில் விளங்கி நிற்போன்; ஞாயிறு, நிலவு, தீ என்னும் முச்சுடர்களில் தெறுகதிரும், தண்கதிரும் அடுதல் சுடுதல் விளக்கம் முதலிய சத்தியுமாய் இருப்போன் எனினும் அமையும். கண்டீர் முன்னிலைப் பன்மை அசைச்சொல்; கண்டாய் என்னும் முன்னிலை ஒருமை அசைச்சொல் போல. "அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே" எனப் பின்னும் அருளிச் செய்துள்ளார். இத்திருப்பதிகம் அரசமுடி மன்னனுக்கே உரித்தாதல் போல வணக்கம் சிவபிரானுக்கே உரியது என்பது உணர்த்துகின்றது.அதனை, ஏனையோர்க்குச் செய்யும்போதும், ஏனையர் தமக்குச் செய்யும் போதும், அது, சிவபிரானுக்கு ஆகும் எனப் புத்திபண்ணுவர் அறிவுடையோர். |