பாடல் எண் : 3 - 2
கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை
விரும்பொப் பானைவிண் ணோரும் அறிகிலா
அரும்பொப் பானை யரத்துறை மேவிய
சுரும்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.
2
பொ-ரை: நாம் தொழுவது, கரும்பும், கரும்பினிற் கட்டியும் ஒப்பானும், விரும்பிய பொருளை ஒப்பானும், தேவரும் அறியா அரும்பு ஒப்பானவனும், அரத்துறைத் தலத்தை விரும்பிய வண்டு போல்வானும் ஆகிய பெருமானையே.
கு-ரை: சாதகர்க்குக் கரும்பில் உள்ள சாற்றைப்போல அவர்தம் சாதனங்களில் மறைந்து நின்று அவர் சாதித்தவழி அன்பினில் விளைந்த ஆரமுதாய்த் தோன்றலின் கரும்பொப்பானை எனவும், மெய்யன்பர்களாகிய சீவன்முத்தர்க்கு அவர் தம் அயரா அன்பே இன்பாய் யாண்டும் வெளிப்பட்டு நின்றே அருளுதலினால் கரும்பினிற் கட்டி (சருக்கரைக் கட்டி) எனவும், யாரேயாயினும் யான் எனது என்னும் செருக்கு அறாத வழி அவர்க்கு அவன் திருவருள் தோன்றாது ஆதலின் விண்ணோரும் அறிகிலா எனவும், ஆயினும் அச்செருக்கு நீங்கும் வகை சிவதன்மம், சிவயோகம், சிவஞானம் என்னும் சாதனங்களைச் செய்து வருவார்க்கு அவர் தம் உள்ளத்தே உணர்வின்ப அன்பாய், முளைத்துத் தோன்றி விரிதலின் அரும்பு ஒப்பானை எனவும், அங்ஙனம் அரும்பும் அன்பினர் உள்ளக்கமலங்களை முதல்வன் தன் அருட்கதிர்களால் அறியாமைச் சுருள் நீக்கி மலர்வித்துச் `சீவனுக்குள்ளே சிவமணம்பூத்தது' என்றபடி வெளிப்படுத்தலின் சுரும்பொப்பானை எனவும் அருளிச்செய்தார் சுவாமிகள். திருவரத் துறையை முதல்வன் விரும்பியது தன்னை உயிர்கள் அவ்விடத்து அணுக்கமாகக் கண்டு தொழுது உய்தற் பொருட்டு. விரும்பு ஒப்பானை என்றது ஒருவர்க்குத் தாம் விரும்பிய பொருளினும் மேலானது (அந்நிலைக் கண்) இல்லாதவாறுபோல எஞ்ஞான்றும் எல்லார்க்கும் தானே தலையாய பேறாய் நிற்போன் என்றபடி. `அருளிற் பெரிய தகிலத்தில்; வேண்டும் பொருளிற்றலையிலது போல்ழு என்னும் திருவருட் பயன் காண்க. `வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்ழு எனத் தோத்திரத்தும்,ழுசெய்வோர் செய்திப் பயன் விளைக்கும் செய்யே போற்செய்வன்' எனச் சாத்திரத்தும் ஓதுதலின். விரும்பு ஒப்பானை என்றதற்கு உயிர்களின் விருப்பத்தை ஒத்துப் பயன்விளைப்பானை என உரைப்பினும் அமையும்.