பாடல் எண் : 3 - 9
காழி யானைக் கனவிடை யூருமெய்
வாழி யானைவல் லோருமென் றின்னவர்
ஆழி யான்பிர மற்கும ரத்துறை
ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே.
9
பொ-ரை: நாம்தொழுவது, காழித்தலத்துக் கடவுளும், பெருமையை உடைய விடையூரும் நித்தத் திருமேனி உள்ளவரும், பிறரால் வல்லோரும் என்று கூறப்படுவோராகிய திருமால் பிரமனுக்கும், ஒடுங்கும் தானமாக உள்ளவருமாகிய திரு அரத்துறை அடிகளையே.
கு-ரை: "காழியான், விடையூரும் மெய்வாழியான், ஆழியான் பிரமற்கும் ஊழியான் என்னும் மூன்று தொடர்களும் சிவபிரான் என்றுமுள்ளவன் என்னும் மறைகளின் துணிபை வலியுறுத்துவன. காழி - இறைவனுக்கு அருணிலைத் தானமாக அமைந்து பன்னிரண்டு ஊழிகளில் அழியாது நிலைபெற்றுப் பன்னிரு பெயர் எய்திய பதி. விடை - அறவிடை; அஃது ஊழிக்காலத்துத்தான் அழியாதிருத்தற் பொருட்டு முதல்வனைச் சார்ந்து அவன்றன் ஆணையால் அவனைத் தாங்கும் ஊர்தியாகி நிலைபேறு உடையதாயிற்று. திருமாலையும் பிரமனையும் காப்புக் கடவுளும் படைப்புக் கடவுளுமாக உடைமை பற்றி ஊழியைக் கடக்க வல்லோரும் ஆவார் என்பார்.
மெய்வாழியான் - நிலைபேறுள்ள அநாதி முத்த சித்து உருவினன். என்றின்னவர் - என்ற இவர் என்னும் பொருள்படநின்றது.