|
பொ-ரை: நெருப்பினைக் குவித்துவைத்தாலொத்த நீண்ட சடை உடையவரும், மலையினையொத்த மதயானையினை உரித்துப் போர்த்தவரும் ஆகிய திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருமார்பிற் புரள்கின்ற முந்நூல், மலையினை அரித்துக் கொண்டு இழிகின்ற அருவிப்புனலைப் போன்றுள்ளது. கு-ரை: நெருப்பினால் குவிந்தாலொக்கும் நீள்சடை - நெருப்பைக் குவித்தது போன்று செவ்வொளி விரித்த நீள்சடை. பருப்பதம் - மலைபோன்ற. மதயானை - மதம் பொருந்திய யானை, திருமார்பின் நூல் பொருப்பு அருவி இழிபுனல் போன்றது - மார்பில் அணிந்த பூணூல் மலையினின்று இழியும் அருவி போன்றது என்க. |