பாடல் எண் : 30 - 9
நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை
மருப்ப ராய்வளைந் தாலொக்கும் வாண்மதி
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்ப ராயிருப் பாரை யறிவரே.
9
பொ-ரை: நெருப்பு அராவி நிமிர்ந்ததனையொத்த நீண்ட சடையையும், தந்தத்தை அராவி வளைத்தது போன்ற பிறைமதியையும் உடையராய்த் திருப்பராய்த்துறையில் விரும்பியெழுந்தருளி இருக்கும் அருட்செல்வர் தம்மிடம் விருப்பமாக உள்ளவர்களை நன்கு அறியும் இயல்பினர் ஆவர்.
கு-ரை: நெருப்பராய் நிமிர்ந்தாலொக்கும் நீள்சடை - நெருப்பு நீண்டு நிமிர்ந்து நின்றது போன்ற சடை. மருப்பராய் வளைந்தாலொக்கும் வாண்மதி - யானையின் மருப்பு வளைந்திருத்தலை ஒக்கும் ஒள்ளிய பிறைமதி.