பாடல் எண் : 31 - 1
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள்
ஆனைக் காவிலம் மானை யணைகிலார்
ஊனைக் காவி யுழிதர்வ ரூமரே.
1
பொ-ரை: தெளிவற்ற சிலர், உலகிற்கெல்லாம் அரசனாகிய சிவபெருமானைச் சுமத்தலாற் குளிர்ந்த மனத்தை உடையராய் அச் சிவானந்தத் தேனை உண்ணாதவராயுள்ளனர்; சில ஊமர்கள் ஆனைக்காவில் எழுந்தருளியுள்ள தலைவனை அணையாதவர்களாய்த் தம் தசைபொதிந்த உடலை வீணே சுமந்து திரிவர்!
கு-ரை: கோனை - எல்லா உலகிற்கும் தலைவனாகிய பெருமானை. காவி - காப்பாற்றி. குளிர்ந்தமனத்தராய் - மனங்குளிர்ந்தவராய். தேனை - அப்பெருமானது திருவருளமுதாகிய தேனை. காவி-விரும்பிக் காத்து உண்ணார்-உண்ணாரவராயினர். தெண்ணர்கள்- தெளிந்த அறிவில்லாதவர்கள்.
ஆனைக்காவில் எம் அண்ணலை-திருவானைக்கா என்னும் தலத்தில் எழுந்தருளிய எங்கள் தலைவனை. அணைகிலார் -சென்று தரிசிக்காதவராய். ஊனை- இவ்வுடலையே. காவி- ஓம்பி.
உழிதர்வர் - திரிவர், ஊமர்-ஊமையர். வாய்பெற்ற பயனை வாழ்த்திப் பெறாதவராதலால் வாயிருந்தும் ஊமையர் என்றார்.