பாடல் எண் : 31 - 3
துன்ப மின்றித் துயரின்றி யென்று நீர்
இன்பம் வேண்டி லிராப்பக லேத்துமின்
என்பொன் ஈச னிறைவனென் றுள்குவார்க்
கன்ப னாயிடும் ஆனைக்கா வண்ணலே.
3
பொ-ரை: என் பொன்போல்வான் என்றும், ஈசன் என்றும், இறைவன் என்றும் உள்ளத்தே உள்குவார்கட்கு ஆனைக்காவின் அண்ணல் அன்பனாய் அருள்புரிவான் ஆதலால், துன்பமும் துயரமும் இன்றி என்றும் குன்றாத இன்பத்தை நீர் விரும்புவீரேயாயின். இரவு பகல் எப்போதும் வழிபடுவீராக.
கு-ரை: துன்பம் - உடலால் நுகரப்படும் துன்பம். துயர் - மனத்தால் நுகரப்படும் துன்பம். என்றும் - எப்போதும். நீர் - நீங்கள். இன்பம் வேண்டில் - இன்பத்தோடிருக்க விரும்பினால். இராப்பகல் - இரவும் பகலும். ஏத்துமின் - தோத்திரியுங்கள். என்பொன் - எனக்குப் பொன்னாயிருப்பவன். ஈசன் - தலைவன். உள்குவார்க்கு - நினைக்கும் அடியார்களுக்கு.