|
பொ-ரை: நறுமணம் வீசுகின்ற சிவந்த தன் இணையடிகளை நாவினால் பெரிதும் இடைவிடாது ஏத்தி உள்ளத்தே அடைத்தவர்களுக்கும், "வினைத் துன்பங்களினின்று எம்மைக் காப்பாயாக" என்று கைதொழுவார்களுக்கும், ஆனைக்காவின் அண்ணல் ஆவா என்று அபயம் கொடுத்தருளும் இயல்பினன் ஆவன். கு-ரை: நாவால் - நாக்கினால். நறுமலர்ச் சேவடியை நன்று ஓவாது ஏத்தி என்க. நன்று - நல்லவண்ணம். ஓவாது - இடைவிடாது. உளத்து அடைத்தார் - மனத்தின்கண்ணே இருத்தியவர். வினை காவாய் - வினைபோக்கிக் காப்பாற்றுவாய். தங்கை தொழுவார்க் கெலாம் - தம்கையால் வணங்குவார் எல்லார்க்கும். ஆ, இரக்கச் சொல்; இரங்குவான் என்றபடி அருகே வந்துய்க என்றுமாம். |