பாடல் எண் : 31 - 7
ஒழுகு மாடத்து ளொன்பது வாய்தலுங்
கழுக ரிப்பதன் முன்னங் கழலடி
தொழுது கைகளால் தூமலர் தூவிநின்
றழும வர்க்கன்ப னானைக்கா வண்ணலே.
7
பொ-ரை: ஒன்பது வாயில்களும் ஒழுகுகின்ற மாடமாகிய உடம்பினைக் கழுகுகள் அரிக்கும் இறுதிக்காலம் வருதற்கு முன்பே தன் இணையடிகளைக் கைகளால் தொழுது தூய மலர்களால் தூவி நின்று அழுகின்ற அன்பர்கட்கு அன்பனாய் நின்று அருள்பவன் ஆனைக்காவின் அண்ணலே ஆவன்.
கு-ரை: ஒழுகும் மாடம் - எங்கும் ஓட்டைகளையுடைய வீடு. "மலஞ்சோரும் ஒன்பது வாயில்" (தி.8.திருவா.) ஒன்பது வாய்தலும் - ஒன்பது வாயில்களையும், செவி, மூக்கு, கண், வாய், மலக்குறி, நீர்க்குறி ஆகியன. இறக்குமுன் என்பதாம். வாய்தல் - வாயில்; வழி. உடம்பு ஒன்பது ஓட்டைகளை உடையது ஆதலின் அவ்வழியை வாயிலென்றார். கழுகரிப்பதன்முன் - அவ்வுடலாகிய வீடு இறந்து அழிந்து கழுகு அரித்துத் தின்னும் முன்னே. கழலடி - கழலிணிந்த திருவடிகளை. அழுமவர்க்கு - அழுபவர்களுக்கு.