பாடல் எண் : 31 - 9
நேச மாகி நினைமட நெஞ்சமே
நாச மாய குலநலஞ் சுற்றங்கள்
பாச மற்றுப் பராபர வானந்த
ஆசை யுற்றிடும் ஆனைக்கா வண்ணலே.
9
பொ-ரை: அறியாமை உடைய நெஞ்சமே! உன்னைக் கெடுக்கும் இயல்புடையனவாகிய குலம், நலம், சுற்றம், பாசம் முதலியவை அற்று மிக உயர்ந்த ஆனந்த ஆசை உற்று, ஆனைக்காவின் அண்ணலை நேசமாகி நினைந்து உய்வாயாக.
கு-ரை: நேசமாகி - அன்புமயமாகி. மடநெஞ்சமே - இதுவரை அறியாதிருந்த மனமே. நினை - நினைப்பாயாக.
நாசமாய - அழிவனவாகிய. குலநலம் - குலத்தின் உயர்வு. பராபர ஆனந்தம் - மிக மேலான இன்பம். உற்றிடும் - உறுவிக்கும்.