|
பொ-ரை: பல கொடிகள் எடுக்கப்பெற்றதும், திருவிழாக்களினால் உண்டாகும் ஆரவாரங்கள் அறாததும், மணமிக்க பூம்பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருக்கச்சியேகம்பரும் திருநீற்றுப் பொடியினைப் பூசிய பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருக்கும் சுவாமியும் ஆகிய பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம். கு-ரை: கொடிகொள் - கொடிகளைக்கொண்ட. விழாக்குணலை - திருவிழா ஆரவாரம். அறா - நீங்காத. கடிகொள் - மணம் பொருந்திய. பூம்பொழில் - பொலிவையுடைய சோலை. கொடிகொள் செல்வம் விழா அறா என்பவற்றைத் தனித்தனியே கச்சியேகம்பம் என்பதனோடு கூட்டுக. பொடிகள் - திருநீறு. பூந்துருத்திநகர் அடிகள் - பூந்துருத்தி என்னும் நகருக்குரிய தலைவர். சேவடி - சிவந்த திருவடிகள். நாம் இருப்பது அடிகள் சேவடிக்கீழ் என்க. இப்பதிகம், திருவடிக் கீழிருந்து அநுபவிக்கும் இன்புறு நிலையை உணர்த்துகின்றது. 'ஓங்குணர்வின் உள்ளடங்கி உள்ளத்துள் இன்பொடுங்கத் தூங்குவர்மற் றேதுண்டு சொல்' (திருவருட்பயன். 10.1.) என உணர்த்தப்படும் நிஷ்டையின் இயல்பு, இங்குள திருவாக்குப் போலெழும் திருமுறைகளை மூலமாகக் கொண்டது. இது பரமுத்தி நிலையைக் குறிக்கும். திருப்பூந்துருத்தித் திருமடத்தில் தங்கி வாழ்ந்த குறிப்பு இப்பதிகத்தே அமைந்திருத்தல் அறிதற்குரியது. |