பாடல் எண் : 34 - 10
வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை
நெருங்க நீள்வரை யூன்றுநெய்த் தானனார்
புரிந்து கைந்நரம் போடிசை பாடலும்
பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே.
10
பொ-ரை: வலிமை பெற்ற தோளாற்றல் உடைய இராவணனை நீண்டவரை நெருங்கும்படித் திருவிரலையூன்றிய திருநெய்த்தானனாரை விரும்பி கைநரம்புகளோடு இசையினால் அவன் பாடுதலும் அதற்கு விரும்பிய பெருமானைப் பணிவார்களின் வினைகள் கெடும்.
கு-ரை: வலிந்த தோள் - வலிமையுடைய தோள் என்க. நெருங்க - அழிய. நீள்வரை - நீண்டகயிலாயமலை. புரிந்து - இடைவிடாது விரும்பி. கைந்நரம்பு - கையின்கண் உளதாகிய நரம்பு. பரிந்தனை - பரிவு செய்தவனை; இரங்கியவனை. பாறும் - அழியும்.