பாடல் எண் : 34 - 2
இரவ னையிடு வெண்தலை யேந்தியைப்
பரவ னைப்படை யார்மதில் மூன்றையும்
நிரவ னைநிலை யானநெய்த் தானனைக்
குரவ னைத்தொழு வார்கொடி வாணரே.
2
பொ-ரை: இரத்தலை உடையவனும், வெண்தலை ஏந்தியவனும், எல்லோராலும் பரவப்படுபவனும், படையுடையார் முப்புரங்களையும் எரியால் நிரந்தவனும், ஞானாசாரியனும் நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தான்னுமாகிய பெருமானைத் தொழுவார்கள் இவ்வுலகத்து நன்கு வாழ்வோராவர்.
கு-ரை: இரவனை - பிச்சையிரப்பவனை. ஏந்தியை - ஏந்தியவனை. பரவனை - எங்கும் பரவி இருப்பவனை. படையார் - ஆயுதங்கள் செறிந்த. நிரவனை - அழித்தவனை. குரவனை - முதற்பெருங் குருவாக விளங்குபவனை. கொடிவாணர் - ஒழுங்கில் வாழ்பவராவர்.