|
பொ-ரை: பிடித்த கொடுமையை உடைய பாம்பு நெடுமூச்சுவிடவும், அப்பாம்பினைக்கண்ட பிறைமதி நடுங்கிக் காண அப் பாம்பைப் பற்றியாடுபவனாகிய கொன்றைத்தாரும் மாலையும் உடைய பழனத்தலத்துப் பெருமான் இவற்றைச் சடைக்கணிந்திட்டது என்னையோ? கு-ரை: பிடித்த மூர்க்கப்பாம்பாகிய அது மூச்சிட வாக்கு அப்பாம்பினைக் கண்ட துணிமதி பார்க்க அப்பாம்பினைப் பற்றும் பழனத்தான் என மாற்றுக. பிடித்த - பற்றிய. மூர்க்கப் பாம்பு - கொடியபாம்பு. மூச்சிட - பெருமூச்சுவிட்டுச் சீற. வாக்கு - நீர் ஒழுகியதுபோல் நெளிந்துவரும். துணிமதி - பிறை மதி. பார்க்க - காண. பற்றும் - பிடித்து ஆட்டும். தார்க்கொள்மாலை - இண்டை முதலிய மாலைவகைகளோடு. அணிந்திட்டது - தலையில் சூடியுள்ளது. பழனத்தான் சூடியுள்ளான். கொன்றை மாலையோடு இவற்றைச் சூடியது என்னையோ என்க. |