பாடல் எண் : 35 - 9
சுற்று வார்தொழு வார்சுடர் வண்ணன்மேல்
தெற்றி னார்திரி யும்புரம் மூன்றெய்தான்
பற்றி னார்வினை தீர்க்கும் பழனனை
எற்றி னான்மறக் கேனெம் பிரானையே.
9
பொ-ரை: திரியும் புரங்கள் மூன்றையும் எய்தவனும், பற்றியவர்களுடைய வினைகளைத் தீர்க்கும் பெருமானுமாகிய பழனத்தலத்து இறைவன் சுற்றுவாரையும் தொழுவாரையும் மேலே உயர்த்தும் ஒளிவண்ணனாயுள்ளனன்; எம்பெருமானை எதனால் அடியேன் மறக்கக்கூடும்?
கு-ரை: சுற்றுவார் - வலம் வருவார். சுடர்வண்ணன் மேல் - ஒளிவண்ணமுடைய பெருமானிடத்து. தெற்றினார் - உலகங்களை அழித்தவர்களாய்; திரியும் என்க. பற்றினார் - பற்றுக்கோடாகக் கொண்டவர். ஏற்றினால் - எதனால்.