பாடல் எண் : 36 - 3
வேறு கோலத்த ராணலர் பெண்ணலர்
கீறு கோவண வைதுகி லாடையர்
தேற லாவதொன் றன்றுசெம் பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ண லவனையே.
3
பொ-ரை: வேறுகோலத்தோடு கூடியவரும், ஆண், பெண் அல்லாதவரும், கிழித்த கோவணத்துகிலாடையுடையவரும், செம்பொன் பள்ளியில் வீற்றிருந்து கங்கையாளைச் சடையிற் சூடிய அண்ணலாகிய அப்பெருமானைத் தெளித்துகொள்ளுதல் யார்க்கும் எளிதாம் ஒன்றன்று.
கு-ரை: ஆணலர் பெண்ணலர் வேறு கோலத்தர் எனக் கூட்டுக. வேறு கோலத்தர் - ஆண் பெண் அலியலன் என்னுமாறும் இது அவனுருவன்று என்னுமாறும் தனிப்பட்ட கோலம் கொள்பவர். கீறு - கிழித்த. ஐ - அழகிய. துகில் - ஆடை. இருபெயரொட்டு. சிறந்த ஆடை. அவனைத் தேறலாவதொன்றன்று - அவனைத் துணிதல் பசுபோதத்தால் ஆவதொன்றன்று.