|
பொ -ரை: தேவர்கள் சென்று இறைஞ்சுகின்ற செம்பொன் பள்ளி இறைவர் கொன்றைப்பூப் பொருந்திய சடையில் கங்கையைச் சூடியவரும், ஓரம்பினால் முப்புரம் எரித்தவரும், மூவர்க்கும் முதலாய் நின்ற மூர்த்தியும் ஆவர். கு-ரை: பூவுலாம் -பூக்கள் பொருந்திய. புனல் -கங்கை. ஏ அலால் -அம்பு இல்லாமலே நகைத் தெரித்தவன் என்றபடி. வல் ஏ ஆல் -வலிய அம்பால் எனவும் மாறுக. மூவராய் முதலாய் -படைத்துக் காத்து அழிக்கும் கடவுளராயும். அம்மூவர்க்கும் முழுமுதலாயும் உள்ளவர். தேவர் சென்றிறைஞ்சும் -விருத்திரன் என்ற அசுரனைக் கொல்லும் பொருட்டும் தக்கயாகத்தில் போந்தபழி நீங்குதற் பொருட்டும் இந்திரனும். சிருஷ்டியின் பொருட்டுப் பிரமனும், கணவனைப்பெற இரதியும், எட்டுத்திக்குப் பாலரும் வழிபட்டதாய்த் தலவரலாறு. |