பாடல் எண் : 36 - 8
வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர்
பைங்கண் ஆனையி னீருரி போர்த்தவர்
செங்கண் மால்விடை யார்செம்பொன் பள்ளியார்
அங்க ணாயடைந் தார்வினை தீர்ப்பரே.
8
பொ-ரை: வெவ்விய கண்ணையுடைய நாகத்தினை அஞ்சும்படி ஆர்த்துக்கட்டியவரும், பசுமையான கண்ணையுடைய ஆனையின் பச்சைத்தோலைப் போர்த்தவரும், செங்கண்ணையுடைய திருமாலைத் தமக்கு விடையாக உடையவரும் ஆகிய செம்பொன்பள்ளி இறைவர் தம்மை அடைக்கலமாக அடைந்தவர்களின் வினைகளைத் தீர்ப்பர்.
கு-ரை: வெங்கண் நாகம் - கொடிய கண்ணையுடைய பாம்பு, வெருவுற - அஞ்ச. பைங்கண் - செவ்விய இளைய கண்கள். ஆர்த்தவர் - கட்டியவர். அங்கணாய் - அழகிய பற்றுக் கோடாய். அடைக்கலமாய், அவ்விடத்தவராய், அவரையே புகலிடமாய் எனவுமாம்.