பாடல் எண் : 37 - 10
நீண்ட மாலொடு நான்முகன் தானுமாய்க்
காண்டு மென்றுபுக் கார்க ளிருவரும்
மாண்ட வாரழ லாகிய வானையார்
காண்ட லானைகண் டீர்கட வூரரே.
10
பொ-ரை: நெடியோனாகிய திருமாலும், நான்முகனும் காண்போம் என்று ஆணவத்தாற் கருதிப் புகுந்தும் காண்டற்கரியவராய் மாட்சி உடைய பேரழலாக நிமிர்ந்த ஆனையார்; கடவூர்த் தலத்து இறைவர் காண்டற்குரிய ஆனைபோல்வர்; காண்பீர்களாக.
கு-ரை; காண்டும் - அடிமுடி காண்போம். மாண்ட - செருக்கு அழிந்த. காண்டலானை - அனைவரும் காணத்தக்க ஆனைபோன்றவர்.