பாடல் எண் : 37 - 2
வெள்ளி மால்வரை போல்வதொ ரானையார்
உள்ள வாறெனை யுள்புகு மானையார்
கொள்ள மாகிய கோயிலு ளானையார்
கள்ள வானைகண் டீர்கட வூரரே.
2
பொ-ரை: வெள்ளிமால்வரை போன்ற அயிராவணம் என்னும் ஒப்பற்ற ஆனையை உடையார்; உள்ளவாறே என் உள்ளத்தில் புகுகின்ற ஆனைபோல்வார்; கொள்ளும் இடமாகிய கோயிலுள் ஆனையாய் உள்ளவர்; ஆதலின் கடவூர்த்தலத்து இறைவர் கள்ளம் உடைய ஆனைபோல்வார்; காண்பீர்களாக.
கு-ரை: வெள்ளிமால்வரை - கயிலை; கயிலைபோன்று வெள்ளிய. ஆன் - எருது; எருதையுடையர் என்க. அல்லது ஐராவணம் எனினுமமையும். உள்ளவாறு - மெய்யாக என்னுள் புகுமென்க. ஆனையார் - பெரியர். கொள் அம் ஆகிய கோயில் - அழகைக் கொண்டதாகிய சிறிய கோயில் எனக்கூட்டுக. கள்ள ஆனை - காண்பதற்கு அரிய யானைபோன்றவர்.