பாடல் எண் : 37 - 5
அளித்த ஆன் அஞ்சு மாடிய வானையார்
வெளுத்த நீள்கொடி யேறுடை யானையார்
எளித்த வேழத்தை எள்குவித் தானையார்
களித்த வானைகண் டீர்கட வூரரே.
5
பொ-ரை: அன்பர்கள் பரிந்து கொடுக்கும் பஞ்ச கவ்வியங்களை ஆடிய ஆனையார்; வெண்மையான இடபக்கொடி உடைய ஆனையார்; இகழ்ந்து வந்த யானையினை எல்லோரும் எள்குமாறு உரித்த ஆனையார்; கடவூர்த்தலத்திறைவர் களிப்புற்ற யானை போல்வர்; காண்பீர்களாக.
கு-ரை: ஆன் அளித்த அஞ்சும் ஆடிய என்க. ஆன் - பசு. அஞ்சு - பஞ்சகவ்வியம். வெளுத்த ஏறு - நீள்கொடியில் வெளுத்த ஏறுடையார் என மாறி வெள்விடைக் கொடியர் என்க. எளித்த - எளிதாகக் கருதிக் கொல்லவந்த. எள்குவித் தானையார் - இகழ்ந்து கொன்ற இயல்பினர். பெயரெச்சத்தகரம் தொக்கது. களித்த - மிக்க இன்பத்தையுடைய.