பாடல் எண் : 37 - 7
மண்ணு ளாரை மயக்குறு மானையார்
எண்ணு ளார்பல ரேத்திடு மானையார்
விண்ணு ளார்பல ரும்மறி யானையார்
கண்ணு ளானைகண் டீர்கட வூரரே.
7
பொ-ரை: மண்ணுலகின் உள்ளாரை மயக்கம் உறுவிக்கும் ஆனையார்; எண்ணிக்கையிற் பெருகிய நல்லடியார் பலர் ஏத்தித்தொழும் ஆனையார்; விண்ணுலகின்கண் உள்ள தேவர்கள் பலரும் அறிகின்ற ஆனையார்; கடவூர்த்தலத்து இறைவர் காதலாகித் தொழும் அடியார் கண்ணுள் நின்று காட்சி வழங்கும் ஆனைபோல்வர்; காண்பீர்களாக.
கு-ரை: மண்ணுளார் - மக்கள். மயக்குறும் - பரிபாக மடைதற் பொருட்டு மலங்களாகிய அழுக்குகளில் மயக்குறுவிக்கும். எண்ணுளார் பலர் - பல எண்ணங்களையுடைய பலர். கண்ணுள் ஆனை - கண்களுக்குள் நீங்காதிருக்கும் ஆனை போன்றவர்.