பாடல் எண் : 38 - 1
குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தாங்கட வூரின் மயானத்தார்
பழைய தம்மடி யார்செய்த பாவமும்
பிழையுந் தீர்ப்பர் பெருமா னடிகளே.
1
பொ-ரை: கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் சங்கவெண்குழையணிந்த காதினர்; கோவண ஆடையினர்; அன்பு செய்யும் அடியார்கட்கு மிக்க அண்மையில் உள்ளவர்; தம் பழைய அடியார்கள் செய்த பாவமும் பிழையும் தீர்ப்பவர்.
கு-ரை: குழைகொள் காதினர் - குழையணிந்த காதினை உடையவர். உழையர் - மானைக் கையின்கண் உடையவர்; பக்கத்திருப்பவர் எனலுமாம். பழையதம் அடியார் - வாழையடி வாழையாய்த் தொண்டுரிமை பூண்ட அடியவர். பிழை - குற்றம். பெருமா னடிகள் - இறைவன்; இத்தலத்து இறைவர் திருப் பெயராகவும் கூறுவர்.