பாடல் எண் : 38 - 3
சூல மேந்துவர் தோலுடை ஆடையர்
ஆல முண்டமு தேமிகத் தேக்குவர்
கால காலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமா னடிகளே.
3
பொ-ரை: கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், சூலம் ஏந்தியிருப்பவர்; புலித்தோலை உடுத்திருப்பவர்; ஆலம் உண்டு அமுதைப் பிறர்க்குத் தேக்கி அளிப்பவர் . காலனுக்கும் காலர்; மாலையணிந்த மார்பினர்.
கு-ரை: உடை ஆடை - இருபெயரொட்டு, ஆலம் - நஞ்சு. அமுதே மிக - அந்நஞ்சே அமுதமாக. தேக்குவர் - நிறைவிப்பர். அன்றித்தாம் நஞ்சுண்டு அமரர்க்கு அமுதம் பெருகத் தருபவர் என்க. காலகாலர் - காலனுக்குக் காலனார்.