பாடல் எண் : 38 - 6
எரிகொள் மேனி யிளம்பிறை வைத்தவர்
கரியர் தாங்கட வூரின் மயானத்தார்
அரிய ரண்டத்து ளோரயன் மாலுக்கும்
பெரியர் காணும் பெருமா னடிகளே.
6
பொ-ரை: கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், சிவந்த தழல் வண்ணம் கொண்ட திருமேனியும், இளம்பிறை வைத்த சடையும் உடையவர்; அயிராவணம் என்ற ஆனையை உடையவர்; அயன், திருமால் முதலிய தேவர்கள் யாவருக்கும் காண்டற்கு அரியர்; பெரியர்; காண்பீர்களாக.
கு-ரை: எரிகொள்மேனி - நெருப்பின் நிறங்கொண்ட சிவந்த மேனி. கரியர் - எல்லா உயிர்களுக்கும் சான்றாக நிற்பவர், அகோர முகத்தினர் எனலுமாம், அண்டத்துளோர் - வானுலகில் உள்ளவர்.