|
பொ-ரை: மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலும், கங்கை வெள்ளம் தாங்கிய சடையனுமாகிய பெருமானை விரும்பிக் காதல் கொள்ளும் இயல்புடைய திரண்ட வளைகள் பெய்யப்பட்ட இப்பெண் உள்ளத்தால் உள்கி அப்பெருமான் திருப்பெயரையே உரைக்கும் தன்மையள் ஆயினள். கு-ரை: மங்கை நல்லாள் ஒருத்தி என்ற எழுவாய் வருவித்துக் கொள்க. காதன்மை கொள்ளும் - ஆசைகொள்ளுவாள். கோல்வளை - திரண்ட வளையல்களை. பெய்துறும் -உடல் இளைத்தலால் கீழே கழலவிடுவாள். உள்ளம் உள்கி - மனமுருகி; திருப்பெயர் உரைக்கும் என்க. வள்ளல் - நாற்றிசை வள்ளலாய் மாயூரத்தைச் சூழ நான்கு திசையிலும் வீற்றிருப்பவன். வேண்டி - விரும்பி; சடையனையே விரும்பி என்க. செவிலி கூற்று. |