பாடல் எண் : 39 - 10
நீணி லாவர வச்சடை நேசனைப்
பேணி லாதவர் பேதுற வோட்டினோம்
வாணி லாமயி லாடு துறைதனைக்
காணி லார்க்குங் கடுந்துய ரில்லையே.
10
பொ-ரை: நீண்ட நிலவினையும், அரவத்தையும் சடையில் விரும்பிச் சூடியுள்ளவனைப் பேணாதவர் பேதுறும்படி விலக்கினோம்; ஒளிபொருந்திய மயிலாடுதுறையினைக் காணில், ஆர்க்கும் கடுந்துயரங்கள் இல்லை.
கு-ரை: நேசன் - அன்பனை. பேணிலாதவர் - விரும்பாதவர். பேதுற - துன்புற. ஓட்டினோம் - தீர்க்கச்செய்தோம். வாள்நிலா - ஒளி நிலவும் புகழ். காணில் - தரிசித்தால். கடுந்துயர் - இறப்பு முதலிய மிக்க துன்பங்கள்.