|
பொ-ரை: சடையின்கண் வெண்பிறை வைத்த பெருமை பொருந்திய மயிலாடுதுறைத் தலத்து இறைவனது கொத்தாகப் பொலியும் கொன்றை மலரினைக் கொடுத்தால் தன் சித்தம் தெளிந்து, உடல் பூரித்து வளைகளைச் செறிப்பாள் என் பைங்கொடியாகிய இவள் தன் பச்சைவண்ணமும் நீங்கிப் பழைய நிறம் பெறுவாள். கு-ரை: சித்தம் தேறும் - மனத்தெளிவாள். செறிவளை - கையில் செறித்த வளையல்கள். சிக்கெனும் - கையில் கழலாது செறிந்து பொருந்தும்; மகிழ்ச்சியால் உடம்பு பூரிக்க வளைகழலாது தங்கும் என்றபடி. பச்சை - பசலை. என் பைங்கொடி - என் அன்புமகளாகிய பசிய கொடிபோன்ற பச்சிளம் பருவத்தாள். பால்மதி வைத்த என்க. மா - சிறந்த. கொத்தினிற் பொலிகொன்றை - கொத்துக்களாய் மலர்ந்து பொலிவுறும் பெருமான் சூடிய கொன்றைமாலை. கொடுக்கில் - தருவாரேயானால். கொன்றை கொடுக்கில் சித்தம் தேறும் என முன்னே கூட்டிப் பொருள் காண்க. செவிலி கூற்று. |