பாடல் எண் : 39 - 4
வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை பங்க னருளிலே.
4
பொ-ரை: பெருவீரம் உடையானும், பெருமைக்குரிய மயிலாடுதுறையில் உறையும் அழகிய சொல்லை உடையானாகிய உமைபங்கனும் ஆகிய பெருமான் அருளினால் வெவ்விய சினத்தை உடையனாய் விரைந்துவரும் காலன் நம்மிடம் விரைய மாட்டான்; அஞ்சத்தகுவனவாகிய இறப்பும் பிறப்பும் அறுக்கலாம்.
கு-ரை: வெஞ்சினம் - கொடிய கோபம். விரைகிலான் - விரைந்து வந்து உயிரைக் கொள்ள மாட்டான்; 'ஆல மிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவர்' என்றார் பின்னும். அஞ்சு இறப்பும் - அஞ்சுதற்குரியதாகிய இறப்பு. "யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்கு என்கடவேன்" என்றார் மணிவாசகர். அறுக்கலாம் - நீக்கிக் கொள்ளலாம். மஞ்சன், மைந்தன் என்பதன் போலி.
அஞ்சொலாள் உமை - அஞ்சொலாளாகிய உமை. இத்தலத்து இறைவி திருப்பெயர் அஞ்சொல் நாயகி அஞ்சல் நாயகியாய் அதற்கேற்ப அபயாம்பிகை என மொழி பெயர்க்கப் பெற்று (அபயந்தருபவள் என்ற பொருளில்) வழங்கி வருகிறது.