|
பொ-ரை: நீல நிறம் உடைய கரிய மயில்கள் ஆடும் துறையினை உடையவனே! முக்கோலும், தருப்பைப்புல்லும், ஒரு கையில் கூர்ச்சமும், தோலும் பூண்டு துயரம் அடைந்து பயன் யாது? நுண்ணுணர்வுடையோர்க்கு நூலும் வேண்டுமோ? கு-ரை: கோல் - மூன்று கிளைவடிவாயகோல். அல்லது யோக தண்டம். இது அந்தணர்க்குரியதாதலை "நூலேகரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை அந்தணர்குரிய" (தொல், பொருள்.615) "முக்கோல்கொள் அந்தணர்" (கலித்) என்பன முதலியவற்றால் அறியலாம். புல் - தருப்பைப்புல். கூர்ச்சம் - தர்ப்பை நுனிகளை முடிந்தது ; உயிரையோ கடவுளையோ ஆவாகனம் செய்தற்குரியது. தோலும் பூண்டு - மான்தோல் உடுத்து அல்லது பூணூலில் முடித்து. துயரமுற்று - வருந்தி. நுண்ணுணர்ந்தோர்கட்கு நூலும் வேண்டுமோ - மெய்ப்பொருளை நுணுகி உள்ளவாறறிந்த ஞானிகளுக்குச் சாதனங்கள் வேண்டாம் என்பதைக் குறிப்பது. ஞானியர்கள் சாத்திய மடைந்தவர்; அவர்களுக்குச் சாதனங்கள் தேவையில்லை என்பதாம். முக்கோல் முதலியவற்றை உடையவர்களே வேதமோதற்குரியவர் எனப்படுவதால் அவ்வுரிமையைப் பெற்றும் இறைவனை உணராதார்க்குப் பயன் இல்லை என்பதாம். |