|
பொ-ரை: படத்தினைக்கொண்டு ஆடுகின்ற அரவனைய அல்குலை உடைய கங்கையை, மணம்கமழும்படி சடையின் கண் வைத்த மறைவடிவானவனும், வணங்கியெழும் மயிலாடுதுறை உறைபவனுமாகிய இறைவன் அம்மையினை ஒருபாகத்தே கொண்டு அருள்செய்யும் திருக்கோலம் மிக அழகியதாகும். கு-ரை: பணம் - பாம்பின் படம். ஆடு - ஆடுகின்ற. அரவு - அரவுபோன்ற; அரவுகொள் பணம்போன்ற அல்குல் என்க. பகீரதி - கங்கை. மணங்கொள - அவள் தன்னை மணம் புரிந்துகொள்ள. வணங்கு மாமயிலாடுதுறை; அணங்கு எனப்பின்னர் வருதலால் இங்கு அதனைக் கூறாது வணங்கு என்றே கூறினார். அம்பிகை மயில் உருக்கொண்டு பெருமானை வழிபட்டாள் என்பது தலபுராணம். வணங்கும் பார்வதிதேவியாகிய மாமயிலாடுதுறை என்றார். அணங்கு - பார்வதி. கோலம் - தோற்றப் பொலிவு. |