|
பொ-ரை: கந்தையுடை அணிந்தானும், மதிசூடியும், வானவர்க்கு உயர்ந்தானும், திருவண்ணாமலை வடிவினனும், விருப்பம் உடையானும், இகழ்ந்தார் புரங்கள் மூன்றினையும் அட்டானும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ. கு-ரை: நினைத்தால் வீடு எய்துவிப்பது அண்ணாமலை என்னும் திருத்தலம். பிரம விட்டுணுக்களால் முடியும் அடியும் அணுகமுடியாதபடி நிமிர்ந்தெழுந்த சோதிப்பிழம்பே மலையாக உருக்கொண்டு உள்ளது ஆதலின், அத்திருவுரு அண்ணாமலை (அணுகவொண்ணாத மலை) என வழங்கி வருவது. இத் திருப்பதிகத்தில் பாடல் தோறும் திரு அண்ணாமலையனை மறந்துய்வனோ (மறவேன்) என்றருள்கின்றார் அப்பர் அடிகள். திரிபுரம் எரித்த செய்தியும் பாடல் தோறும் வருகின்றது. வட்டு - சிறு உடை, அதை அணிந்தவன், வட்டன். வானவர் சிட்டன் - வானவரால் பெரியோன் என உணர்ந்து தொழப்படுவோன். சிட்டன் - சிரேஷ்டன், உயர்ச்சியுடையோன். இட்டம் உடையோன் இட்டன்; முதல்வன் உயிர்களுக்குச் சிவத்துவத்தை வழங்கும் விருப்பம் உடையான் ஆதல்பற்றி இட்டன் எனப்பட்டான்; இட்டம் - விருப்பம். இகந்ந்தார் - திரிபுரத்தசுரர்கள் (கமலாக்கன், தாரகாக்கன், வித்யுன்மாலி என்னும் மூவர்) இம்மூவரும் முன்னர்ச் சிவ வழிபாடு உடையராய் இருந்து பின் நாராயணன் நாரதர் என்போரால் புத்தமதம் அறிவுறுக்கப்பட்டுச் சிவவழிபாட்டை இகழ்ந்து கைவிட்டனர். அவ்விகழ்ச்சியே அவர்தம் திரியும் வலிய முப்பரங்களை அழித்த தென்க. புரம் - கோட்டை, இக் காலத்துப் போர் விமானங்கள் பலவற்றைத் தாங்கிப் பறக்கும் பெருவிமானந் தாங்கிக் கப்பல் 1போன்றது. 'தொழுவார்க்கே அருளுவன் சிவபெருமான்' என்னும் உண்மையை விளக்குவது திருவண்ணாமலை வரலாறு. சிவ வழிபாடே ஒருவர்க்குப் பகையை வெல்லும் வலியைத் தருவது. அதனை இகழின் தம்வலி இழப்பர் என்னும் உண்மையை உணர்த்துவது திரிபுரம் எரித்த வரலாறு. அட்டன் - அட்டவன், அடுதலைச் செய்தவன். சுவாமிகள் 'மறந்து உய்வனோ?' எனத் தம்மேல் வைத்துக் கூறினாரேனும், 'யாரும் மறந்து உய்தல் இல்லை; யாவரும் திருவண்ணாமலையனை மறவற்க' என்பதே கருத்தாகக் கொள்க. "ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே கண்டோம் என்றுந்தீபற! ஒன்றும் பெருமிகை உந்தீபற" "உய்ய வல்லார் ஒருமூவரைக் காவல் கொண்டு எய்யவல் லானுக்கே உந்தீபற" என்பவற்றை ஒப்புநோக்குக.
|