பாடல் எண் : 4 - 3
மத்த னைம்மத யானையு ரித்தவெஞ்
சித்த னைத்திரு வண்ணா மலையனை
முத்த னைம்முனிந் தார்புர மூன்றெய்த
அதத னையடி யேன்மறந் துய்வனோ.
3
பொ-ரை: ஊமத்தமலர் அணிந்தவனும், யானைத் தோலை உரித்துப் போர்த்து எம் சித்தத்துறைபவனும், திருஅண்ணாமலைத் தலத்துக்குடையவனும், முத்தனும், முனிந்தார் புரங்கள் மூன்றையும் எரியுண்ணச்செய்த அத்தனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
கு-ரை:மத்தன் - ஊமத்த மலர் அணிந்தவன். சித்தன் - சிந்தையை கோயிலாகக் கொண்டவன். முத்தன் - அநாதி முத்தன்; இயல்பாகவே பாசங்களின் நீங்கியோன். `வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்ழு என்றபடி. முனிந்தார் - ஒட்டிவாழ வெறுத்தவராய திரிபுரத்தசுரர்கள் . அத்தன் - தந்தையாயிருப்பவன். `அத்தாவுனக்காளாய் இனி அல்லேன் எனலாமேழு என்றார் (தி.7.ப.1.பா.1) சுந்தரரும்.