|
பொ-ரை: காற்றாகியுள்ளவனும், கலக்குகின்ற வினைகள் விட்டு நீங்கத் தோற்றம்புரிபவனும், திருவண்ணாமலைத் தலத்துக் குடையவனும், உலகினை நன்றுந் தீதுமாய்க் கூறுசெய்து வகுத்தவனும், கொடியவர் புரங்கள் மூன்றையும் எய்த வீரநெறி உடையவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ. கு-ரை: காற்றன் - (அட்ட மூர்த்தங்களில் காற்றும் ஒன்றாதலின்) காற்று வடிவானவன். `காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றிழு என்றார் திருத்தாண்டகத்தும். கலக்கும் - உயிர்களைத் துன்புறுத்தும். தேற்றன் - தெளிவிப்பவன். பழவினைகளைப் பாறுவித்துத் தன்னடியார்களைத் தெளிவிப்பவன் என்க. கூற்றன் - கூறுசெய்பவன். ஆற்றன் - சமயநெறிகளாயிருப்பவன். நீதிநெறியே வடிவாக உடையன் எனலுமாம். (ஆறு - நெறி) |