பாடல் எண் : 4 - 5
மின்ன னைவினை தீர்த்தெனை ஆட்கொண்ட
தென்ன னைத்திரு வண்ணா மலையனை
என்ன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
அன்ன னையடி யேன்மறந் துய்வனோ.
5
பொ-ரை: மின் ஒளியுருவாயவனும், வினைகளைப் போக்கி என்னை ஆட்கொண்ட அழகியவனும், திருவண்ணாமலைத் தலத்துக்குடையவனும், என்னை உடையவனும், இகழ்ந்தவர் புரங்கள் மூன்றையும் எய்த அத்தன்மையனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
கு-ரை: மின்னன்- மின்ஒளி போன்ற ஒளிவடிவினன். தென்னன் - அழகியவன்; தென்னாடுடையவன் எனினும் அமையும். என்னனை - என்னை உடையவனை. அன்னனை - அத்தன்மையோனை, திரிபுரங்களை எரிக்குந் தன்மையோன். அத்தன்மையாவது வேதத்திற் கூறப்படும் தெய்வம் எல்லாம் கருவிகளாகவே அமையத்தான் ஒருவனே வினைமுதல் (கருத்தா) ஆதலும், கருவிகளால் அன்றிச் சங்கற்ப ஆற்றலால் செயல் நிகழ்த்தலும் சார்ந்தாரைக் காத்தலும் முதலியவற்றால் விளங்கும் இறைமைக் குணம்.