|
பொ-ரை: ஐந்துவகை மன்றங்களில் (சபைகளில்) எழுந்தருளியிருப்பவனும், மதியாத தக்கன் வேள்வியின்மேல் உருத்துச் சென்றவனும், திருவண்ணாமலைத் தலத்துக்கு உடையவனும், புலனைந்தும் வென்ற வென்றி உடையவனும், சினந்தார் புரங்கள் மூன்றையும் கொன்றவனும் ஆகிய பெருமானைக் கொடிய வனாகிய அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ. கு-ரை: மன்றன் - அம்பலத்தே நடமாடுபவன். மதியாதவன் - தன்னை முதல்வன் என்று மதிக்க அறியாத தக்கன். வேள்வி மேல் சென்றன் - அவன் இயற்றிய வேள்வியை அழிக்கச்சென்றவன். வென்றன்- வென்றவன்; புலனைந்தும் என்னும் அதற்குரிய செயப்படுபொருள் அவாய்நிலையான் பெறப்பட்டது. (நேரிழையைக் கலந்து நின்றே புலனைந்தும் வென்றானை என்பர் தி.6 திருத்தாண்டகத்து) கொன்றன் - கொன்றவன், அழித்தவன். |