|
பொ-ரை: வீரச்செயல்களைப் புரிந்தவனும், விடம் உண்டவனும், விண்ணவர்க்கு அச்சம் நீக்குபவனும், திருவண்ணாமலை வடிவினனும், மருத நிலத்தை இடங்கொண்டவனும், உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும், ஆத்திமாலை சூடியவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ. கு-ரை: வீரன் - வீரத்திற்கு உறைவிடமானவன். இறைவன் வீரச்செயல்களை எட்டாகத் தொகுத்து வழங்கும் வழக்குக் காண்க. உண்டனை - உடையவனை. விண்ணவர் தீரன் - விண்ணவரை அச்சம்தீர்த்து ஆட்கொள்ளும் திண்ணியன். ஊரன் - மாயோன் முதலிய தெய்வங்கள் போல ஒவ்வொரு நிலத்திற்கே உரிய கருப்பொருள் ஆதலின்றி எந்நிலத்துக்கும் உரிமை உடைமையின், மருத நிலத்தை இடங்கொண்டோன்; திருநின்றியூர், திருப்புன்கூர் முதலாக ஊர் என முடியும் தலங்களில் உறைவோன் எனினும் அமையும். ஆரன் - திரு ஆத்திமாலையை அணிந்தவன்; ஆர் - ஆத்தி. `நாறும் பூவும் நம்பற்காம்; நாறாப் பூவும் நம்பற்காம்ழு என்ப ஆகலின் அடியார்க்கு எளிதில் கிடைக்கும் ஊமத்தை, ஆத்தி முதலிய ஏற்றுச் சூடி அவர்க்கு அருள் செய்பவன் என்பது கருத்து. |