பாடல் எண் : 40 - 2
மருந்து வானவ ருய்யநஞ் சுண்டுகந்
திருந்த வன்கழிப் பாலையு ளெம்பிரான்
திருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள்
பரிந்து ரைக்கிலு மென்சொற் பழிக்குமே.
2
பொ-ரை: தேவர்கள் அமிர்தத்தை உண்டு உய்யத் தான் நஞ்சினை உண்டு உகந்து இருப்பவனும் வலிய கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம்பெருமானுமாகிய இறைவனின் சேவடிகளைச் சிந்தையுள் வைத்து யான் பரிந்து உரைத்தாலும், இவள் என் சொல்லைப் பழிக்கின்றாள்.
கு-ரை: மருந்து வானவர் - அமுதத்தை விரும்பிய தேவர். உய்ய உகந்து - பிழைக்கும்படி விரும்பி. நஞ்சு உண்டு அதனால் தீங்கின்றி மகிழ்ந்திருந்தவன் என்க. திருந்துசேவடி - திருத்தமுற்றுச் சிவந்திருக்கும் திருவடி. பரிந்துரைக்கிலும் - அவளது நிலைநோக்கி வருந்தி அதைத் தீர்க்கும்வழி கூறினும். என் சொல் - என் அறிவுரைகளை. பழிக்கும் - பழித்துக் கூறுவாள். "மாதியன்று நீதிதான்சொல நீயெனக்கு ஆர் எனும்" (தி.5.ப.45.பா.1) என்னும் பாடற் கருத்தோடு ஒப்பிடுக.