பாடல் எண் : 40 - 4
செய்ய மேனிவெண் ணீறணி வான்றனை
மைய லாகி மதிக்கில ளாரையும்
கைகொள் வெண்மழு வன்கழிப் பாலையெம்
ஐய னேயறி வானிவள்தன்மையே.
4
பொ-ரை: சிவந்த மேனியும், அதில் வெண்ணீறு அணியும் கோலமும் உடைய சிவபெருமானின்மேல் மையல் உடையவளாகி, இவள் ஆரையும் மதிக்கிலள்; கையிற் பிடித்த வெண்மழுவினனும், கழிப்பாலையில் உறைவானும் ஆகிய இறைவனே இவள் தன்மையை அறிவான்.
கு-ரை: மையலாகி - மயக்கங்கொண்டவளாகி. ஆரையும் மதிக்கிலள் என்க. தாயார் சொல்லையும் ஏற்றுக்கொள்ளாதவள் என்பதாம். ஐயன் - அழகியன்.