பாடல் எண் : 41 - 7
வரிப்பை யாடர வாட்டி மதகரி
உரிப்பை மூடிய வுத்தம னாருறை
திர்ப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள் போய்
இருப்பர் வானவ ரோடினி தாகவே.
7
பொ-ரை: வரிகளை உடைய படத்தினைப் பொருந்தி ஆடும் அரவத்தை ஆட்டி மதச் செருக்குடைய யானையின் உரியை மெய்ப்பையாக மூடிய உத்தமனார் உறைகின்ற திருப்பைஞ்ஞீலித் தலத்தைத் திக்குநோக்கித் தொழுபவர்கள் வானவர்களோடு இனிதாக இருப்பர்.
கு-ரை: வரி - கோடுகள் பொருந்திய. பை - படத்தோடு கூடிய. ஆட்டி - ஆடச்செய்து. மதகரி - மதம் கொண்ட யானை. உரிப்பு - தோல். திசை - இருக்கும் திசையை நோக்கி.