|
பொ-ரை: செங்கோடலும், வெண்கோடலும், கோங்கமும் ஆகிய பூக்கள் புறவுநிலமாகிய முல்லைநிலத்தை அணிசெய்தலால், வண்டிசைக்கும் பாடல் கேட்கின்ற பைஞ்ஞீலித் தலத்து இறைவர் பேடும் ஆணும் ஆகிய பிறர் அறியாத இயல்பினர், ஆடும் பாம்பைக் கட்டிய ஒப்பற்ற அடிகள் ஆவர். கு-ரை: கோடல் - காந்தள் மலர். புறவு - காடு. அணி - அழகு செய்கின்ற. வண்டசைப் பாடல்கேட்கும் பைஞ்ஞீலி என்க. பேடு ஆணும் - பேடாயும் ஆணாயும் இருப்பவர். பேடென்றும் (பெண்ணென்றும்) ஆணென்றும் பிறரறியாததோர் அடிகள் என்க. |